Tuesday, 8 May 2012

கட்டளையல்ல... எச்சரிக்கை! (Not an Order...But a Warning!)

கட்டளையல்ல... எச்சரிக்கை!
நடப்பது தேர்வுக்காலங்கள்!
அடுத்து வருவது
சோர்ந்துபோன மனதைத்
தேற்றும் காலங்கள்!
ஆம், கோடைவிடுமுறை!

என்ன‌ செய்ய‌ப்போகிறீர்க‌ள்
எனத‌ருமைப் பெற்றோர்க‌ளே?
உங்களின் குறும்புச் சிகரங்களை
வீட்டினில் வைப்ப‌து உங்க‌ள்
இதயத்துடிப்பை எப்போதும்
எகிற‌ வைக்க‌லாம் என்ப‌தால்
வெளியே வைக்க‌ ஆ‌யிர‌ம் வ‌ழிக‌ள், உங்க‌ளுக்கு!
'summer camp’ என்ற‌ பெய‌ரில்
சந்து பொந்தெலாம் புற்றீச‌ல் போல எங்கெங்கும்!
கராத்தே, நீச்சல், தையல், வண்ணம்
யோகாவெனப் புதிய‌ முய‌ற்சிக‌ள்!
டென்னிஸ், கிரிக்கெட், இற‌குப்ப‌ந்தென இருக்கவே
செய்வன விளையாட்டுப் ப‌யிற்சிக‌ள்!

என்ன‌, அவ‌ர்க‌ள் ஆர்வ‌மாய்‌த்தான் கற்றனரா,
பின் நிஜ‌மாய் ப‌ழ‌க்க‌மாக்கி பயிற்சிக்கிறார்களா? 
அதைப்ப‌ற்றி ந‌ம‌க்கென்ன‌?
உங்கள் வீட்டு படாடோபத்தை
பக்கத்து வீடுகளுக்கு பறைசாற்றி
சொல்லிக்கொள்ளலாம்!
அதுவே போதுமா உமக்கு?

ஒரு நிமிடம்!
'உயரிய' உங்கள் நகரத்து எல்லைகள்
தாண்டி எங்கோ தூரத்தில் ஒரு சிறிய‌ கிராம‌த்தில்
உங்க‌ள் பெற்றோர்க‌ள் இருக்க‌க்கூடும்!
குறைந்த‌ ப‌ட்ச‌ம் உங்க‌ள்
தூர‌த்து உறவுக‌ளாவ‌து வாழக்கூடும்!
அனுப்புங்கள் உங்கள் பிள்ளைகளை
அவர்கள் தம் வீட்டுக்கு!
உங்களின் பயிற்சிகள் கொஞ்சம்
தாமதிக்கலாம்!
ஏனெனில் அந்த‌ வயதான உறவுகள்
இருக்கப்போவது இன்னும் சில ஆண்டுகளே!
இதற்கு கோடை விடுமுறை பயிற்சி போல்
பணம் வேண்டாம்; இதனூடே (இக்கவிதையினூடே)
சென்றபின் ஆம் எனச்சொல்லும் மனம் போதும்!
காரமாய் இதனை நான் சொல்ல‌
சில பல காரணங்கள் உண்டு.
          * * *
இப்பக்கம் சமையலறை, அப்பக்கம் குளியலறை
என்று இடுங்கி நசுங்கும் உங்கள் பிள்ளைகள்
முற்றம், தாழ்வாரம், வாசலென‌
நீண்ட நாற்கட்டு வீடுகளில் சுதந்திரமாய் வலம் வரட்டும்.

சோஃபாவிலமர்ந்து 'கார்ட்டூனு'க்குள்
கண்கள் பொதிய தட்டுக்கும் வாய்க்கும்
நடுவில் எவ்வொரு சலனமுமின்றி சாப்பிடும் அவர்கள்
தரையில், தடுக்குப்பாயில் அமர்ந்து
தையல் இலை உணவை ஈர்க்குச்சி விலக்கி
ஓரம் அணைகட்டி உண்ணட்டும்,
பாட்டியோ, அத்தையோ அருகமர்ந்து
ஒவ்வொன்றாய் பரிமாறும், அறுசுவை உணவினை!

நான்கு நாட்களான தண்ணீர்த்த‌யிரினை
திரித்திரியாய் தட்டில் ஊற்றியதற்கு மாற்றாய்
கெட்டித்தயிரினை கையிலேந்தச் சொல்லும் அழகினை,
மனையில் அமர்ந்து உண்ணும் கலையினை-
அவர்களும் கற்கட்டும்!

உலகின் உயர்ந்த 'டென்டிஸ்டு'கள் பரிந்துரைத்த‌
பற்பசையை உபயோகிக்கும் உங்கள் இளவல்கள்
தூணுக்கு மேல் வைத்த கட்டுக் குச்சியினில்
பல் துலக்கும் தாத்தா பலமாய்க் கடித்துண்பதைப்
பார்த்து வியக்கட்டும்!

உங்கள் போன்சாய் மரங்களையே
பார்த்து வளர்ந்தவர்களுக்கு-
அரச மரம், ஆல மரம், வேப்ப மரம்,
பூவரசு என‌‌ப் பார்க்கட்டும்.
இலை பார்த்து, விழுது தொங்கி, துளிர் தின்று,
பீப்பி செய்து, பிசின் எடுத்து, பனை வண்டி ஓட்டி
பலவித 'புதியது' பழகட்டும்!

ஏரிச்சேறு கொண்டு வந்து
வண்டியும் சொப்புகளும் செய்யட்டும்;
அடுப்பினில் சுட்டு அதை உறுதியாக்கட்டும்.
செங்கல் செய்வதை அவன் ‘wikipedia’ வில்
மட்டுமே கற்க வேண்டுமென நினைக்காதீர்கள்,
இப்படியும் கற்கட்டும்! இன்புறுங்கள்!

மரம் ஏறக் கற்க‌ட்டும், கல்லெடுத்து வீசி
புளியம்பழம் உதிர்க்கட்டும்!
காலை எழுந்து ஈச்சமரம் தேடி ஓடி
கீழ் விழுந்த பழங்கள் தேடட்டும்!
மாந்தோப்புக் காய்களை
காக்கா கடி கடித்து உண்ணட்டும்.
கிராமத்துச் சிறுவர்களுடன் சேர்ந்து
கோலி கிட்டிப்புல் ஆடட்டும்.
புழுதியில் புரண்டு கபடி ஆடட்டும்!

ப‌ன‌ங்கிழ‌ங்கும் ப‌ன‌ம்ப‌ழ‌மும் சுட்டுத் தின்ன‌ட்டும்,
ப‌ல்லிடுக்கில் நார் உறுத்த‌ பிடுங்கும் வ‌ரை
நாவினால் துழாவும் அவஸ்தையை அனுப‌விக்க‌ட்டும்!
முட்புத‌ர்க‌ளின் பின்ன‌‌ம‌ர்ந்து காலைக்க‌ட‌ன்க‌ள்
செய்யும் அந்த‌ புதிய‌ அனுப‌வ‌ம் பெற‌ட்டும்!

வயதான தாத்தாவின் கை உதறி
அவர் கதற-
வாய்க்கால் வரப்புகளில் ஓடட்டும்.
சேற்றில் காலூன்றாமல் விழட்டும்.
எப்படி லாவகமாய் அடுத்த வளப்பு
அமைக்கிறார் அந்த ஏர்ஓட்டி என வியக்கட்டும்!

ஐயோ, என் பிள்ளைக்கு
தூசி ஆகாது; கை கால் அடிபடுமே,
அவன் பேசும் 'கான்வென்ட்' ஆங்கிலம் என்னாகும்,
எச்சில் வேண்டாமே, ‘வைரஸ்’ வீரியமாகும்
எனப் பதறும் தாய்மார்களே,
'ஸ்கேட்டிங்'கின் காரைத்தரையில் அவன் விழும்போது
உற்சாகப்படுத்தி காயத்துக்கு மருந்திட்டீர்களே,
அதைவிட இந்த கிராமத்து சேறு வன்மையல்ல!
உங்கள் 'சிட்டி' புகையை விட‌
இந்தப் புழுதிகள் அதிகப் பழுதில்லை!
சுருக்கமாய் உங்கள் பாஷையில்
சொல்லப்போனால்
Don’t worry, ‘He will be fine’!

சொப்பு வைத்து பாட்டியிடம் கேட்ட‌
அரிசியுடன் கல், மண் கலந்து
சமைக்கட்டும்!
தூர இருந்து பாருங்கள்,
சிறு கல் பொறுக்காத தாத்தா
இந்த கல்சோற்றை சுவையாய்த்
தின்பதாய் பாசாங்கு செய்வதை!
அதல்லவோ வாழ்வின் அர்த்தம்?

'பாட்டி, நானும் செய்யட்டுமா'வென‌
கொஞ்சம் பயமாய், கொஞ்சம் புதிராய்
பசுக்காம்பு பற்றி பால் கறக்கட்டும்!
பிஞ்சு விரல்களால் இழுத்துவிட்டு
‘எனக்கு மட்டும் வரலையே’ எனப் பாவமாய் கேட்கட்டும்!
நீங்களும் உம் மக்களும்-
உம் மாநகரக் கூடு சேர்ந்தபின் அதை மறக்கக்கூடும்,
தன் வாழ்வின் மிச்ச காலத்தில்
பசுவின் கால் கட்டும் போதெலாம்
அம்மூதாட்டியின் மனக்கட்டு அவிழுமே, அறிவீரோ நீர்?

ஊர் திரும்பப் போகுமுன்
தாத்தா கொடுத்தது பத்தாதென‌
தன் முந்தானையில் இருந்து பத்து ரூபாய்
அந்தப் பாட்டியை கொடுக்க விடுங்கள்.
தினம் எதிர்நோக்கும் உங்கள்
பக்கத்து 'அபார்ட்மென்ட்' ஆட்கள்
சிறு புன்னகை ம‌ட்டும் காட்டி
க‌த‌வு மூடிப் பார்த்த‌ உங்க‌ள் குழ‌ந்தைக‌ளுக்கு
‘பார்த்து பத்திரமாய் போய் வாருங்கள்’
என பரிசுத்தமான அன்பினால்
உங்க‌ள் வாக‌ன‌ம் வீதிமுனை திரும்பும் வ‌ரை
அந்த கிராமத்து வீதி மக்கள் வழியனுப்புவதை
உங்க‌ள் பிள்ளைக‌ள் விசித்திர‌மாய்ப் ப‌ர்ர்க்க‌ட்டும்!
         * * *
பணம், வசதி, பகட்டு,
எதையும் வாங்கும் சக்தி
உங்களுக்கு இருக்கட்டும்!
உங்கள் பிள்ளைகளுக்கு
உங்களின் இளமைக்காலத்தின்
ஒரு இலையைப் பரிசளியுங்கள்!
உங்களின் மகத்துவம் அவர்களுக்குப் புரியும்.
உங்கள் மேல் மரியாதை கூடும்!

நானொன்றும் உங்கள் பிள்ளைகளை
கொடுமைப்படுத்தச் சொல்லவில்லை,
கிராமம் சென்று வாழுங்கள்,
நான்கு காத தூரம் நடந்து சென்று படிக்கட்டும்,
மின்வசதியின்றி தவிக்கட்டும்,
கணிப்பொறியும் மின்னஞ்சலும் தவிர்க்கட்டும்
என்று சொல்லவில்லை!
எனது நோக்கம் அவர்களை கற்காலம்
அழைத்துச் செல்வதில்லை;
விஞ்ஞான வளர்ச்சியில்
ஓடிக்கொண்டே இல்லையெனில்
பின்தங்கிப்போவார்களென எனக்கும் தெரியும்.

இதையெல்லாம் தாண்டி
அவர்களுக்கு இன்னோர் உலகம் இருக்கிறது
என்ப‌தை புரிய‌ வையுங்க‌ள்!
ஆப்பிளும் 'பிளாக்பெர்ரி'யும் வெறும்
ப‌ழ‌ங்க‌ளின் பெய‌ராக‌ மட்டும் இருந்த‌ கால‌த்தில்
வாழ்க்கை இத்தனை சிக்கலின்றி
தெளிவாக‌ இருந்த‌தென‌த் தெரிய வை‌யுங்க‌ள்!

எல்லாவ‌ற்றிற்கும் மேலாய்
முடிவு எப்போது வ‌ருமென‌ எதிர்பார்த்து
முதுமையை முக‌ர்ந்துகொண்டிருக்கும்
அவ‌ர்க‌ளுக்கு
உம் குழ‌ந்தைக‌ளை உச்சி முக‌ரும்
வாய்ப்பு தாருங்க‌ள்.
'ஒரு ஊரிலே' என்று
இர‌வுக்க‌தைக‌ள் சொல்ல‌ விடுங்க‌ள்!
அவ‌ர்க‌ளின் வாழ்வு முழுமை பெற‌ உத‌வுங்க‌ள்!
அவ‌ர்க‌ள் எதிர்பார்ப்ப‌து உங்க‌ளின்
பணத்தையோ ப‌ரிதாப‌த்தையோ அல்ல‌...
நீங்க‌ள் செல‌விட‌ வேண்டாம்,
அவ‌ர்க‌ளை செல‌விட‌ விடுங்க‌ள்,
ஆண்டுக்கொருமுறை
அவ‌ர்க‌ள் சேர்த்து வைத்த‌ பாச‌த்தை!
புண்ணிய‌மாய்ப் போகும்!
'லாஸ் ஏஞ்ச‌ல்ஸ்' போனாலும் உம்
பிள்ளைக‌ள் 'மெம‌ரி லாஸ்' ஆகாம‌ல்
இருப்பார்க‌ள்.

நக‌ர‌த்தில் இருந்துகொண்டு
கிராம‌த்தை நீங்க‌ள் ம‌ற‌ந்தால்
அவ‌ர்க‌ளும் ம‌ற‌க்க‌க் கூடும்,
அமெரிக்காவில் இருந்துகொண்டு
உங்க‌ள் அழ‌கிய 'ந‌க‌ரத்'தை!
அது அமைக்கும் உங்கள் முதுமை நரகத்தை!
ஆம்! இது கட்டளையல்ல...எச்சரிக்கை!